×

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை சிறுதானிய உணவு திருவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை சிறுதானிய உணவு திருவிழா நடைபெறவுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய நாடுகள் சபையால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொது மக்களாகிய நுகர்வோரிடையே பாரம்பரிய உணவான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவுத் திருவிழா நடத்தப்படும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தலைமையில் சிறுதானிய உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இக்கண்காட்சியில் சிறுதானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்த விவரங்களுடன் சிறுதானிய உணவுகளை சிறப்பாக தயார் செய்து உரிய குறிப்புகளுடன் பொதுமக்களாகிய நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசுத் துறைகள், சுய உதவிக்குழுக்கள்/தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்புகளால் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேற்படி அமைப்புகளில் சிறப்பான பங்களிப்பினை வழங்குபவர்களில் முதல் 3 இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசுத் தொகை மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இதில் பொதுமக்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சிறுதானிய உணவுகளின் பயன்பாடு குறித்து தெரிந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை சிறுதானிய உணவு திருவிழா appeared first on Dinakaran.

Tags : Small grain food festival ,Kanchipuram Collector ,Kanchipuram ,Small grain food ,Collector ,Kalachelvi Mohan ,
× RELATED காஞ்சிபுரம் அருகே ஓரத்தூர் பகுதியில்...